Monday, July 30, 2012

மறுமையில் வெற்றி பெற




ஏக இறைவனின் திருப்பெயரால்...

     மறுமையில் வெற்றி பெற

இவ்வுலகில் வாழக்கூடிய மக்களில் பெரும்பான்மையினர் மறுமையை அதாவது நாம் இறந்த பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்லவிர்க்கின்றோம் என்பதை நம்பக்கூடியவர்களாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாகவே மறுமையின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக இருக்கின்றனர். மறுமையை நம்பாமல் ஒரு முஸ்லிம் கூட முஸ்லிமாக இருக்க முடியாது.

முஸ்லிம்கள் அனைவரும் மறுமையை நம்பினாலும் அதிகமானோர் அதில் நாம் எவ்வாறு வெற்றி அடைவது என்பதை அறியாத மக்களாகவே உள்ளனர். இன்றைய முஸ்லிம்களாகிய நாம் இயக்கங்களின் ரீதியாகவும், கட்சி, அரசியல், கொள்கைகள், மத்கபுகள் போன்ற பல்வேறு காரணங்களினால் பல பிரிவுகளாக இருக்கின்றோம். அனைவருமே மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எண்ணுகின்றோம். ஆனால் அதற்கான (மறுமை வெற்றிக்கான) சரியான பாதையில் தான் நாம் செல்கின்றோமா என்பதை சிந்திப்பதில்லை. அவற்றை தெளிவு படுத்தவே இந்தக் கட்டுரை.

மறுமையில் வெற்றி பெற சரியான பாதை எது என்பதை அறிய நாம் பெரிய பெரிய ஆராய்சிகளையெல்லாம் மேற்கொள்ள தேவையில்லை. இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறியிருக்கின்ற ஒரு வசனத்தை படித்தால் போதும், அந்த சரியான பாதையை எளிமையாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.

பொதுவாக இந்த உலகத்தில் ஒரு மனிதன் ஒரு காரியத்தில் தோல்வியடைந்துவிட்டால் பின்பு அவன் அவற்றை எண்ணி புலம்பக்கூடியதை பார்த்திருப்போம். ஏன் நாம் கூட அது போன்ற நிலையை அடைந்திருப்போம். ஒருவன் மிகவும் சிரமப்பட்டு ஒரு தொழிலை துவங்குகின்றான் என்று வைத்துக்கொள்வோம். தொழிலை துவங்குவதற்கு முன் அதைபற்றிய அறிவு உள்ளவர்களிடம் கேட்காமல் இவனாகவே துவங்கியதால் நஷ்டம் ஏற்பட்ட பிறகு தனக்கு ஏற்பட்ட இழப்பை பற்றி புலம்புவான். இதை பற்றி இவரிடம் கேட்டிருக்க கடாதா? அவர் சொன்னபடி செய்திருக்கக்கூடாதா? என்று புலம்புவான். அதே போலதான் ஒரு பள்ளி மாணவனும் தன்னுடைய தேர்வில் தோல்வியடைந்துவிட்டால், நான் ஆசிரியர் சொன்னதை சரியாக கேட்டிருந்தால் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டேனே என்று புலம்புவான்.

அதே போன்றுதான் நாளை மறுமையிலும் இவ்வுலகில் தங்களுடைய வாழ்வை சரியாக அமைத்துக் கொள்ளாமல் நரகத்திற்கு சென்ற மக்கள், நாங்கள் ஏன் நரகத்திற்கு வந்தோம் என்றும், எவ்வாறு நடந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டோம் என்றும் புலம்புவார்கலாம். அவ்வாறு இவர்கள் புலம்புவார்கள் என்று இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான். இதை நாம் அறிந்து கொண்டால் மறுமைக்கான வெற்றிப் பாதை எது? என்பதையும் தோல்விக்கான பாதை எது? என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் 'நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதாஇத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?' எனக் கூறுவார்கள்.

எங்கள் இறைவா! எங்கள் தலை வர்களுக்கும்,எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்எனவும் கூறுவார்கள்.

'எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!' (எனவும் கூறுவார்கள்.)          (அல்குரான் 33: 66,67,68).

நாளை மறுமையிலே நரகத்திற்கு சென்றுவிட்ட மக்கள் நாங்கள் இங்கு வராமல் இருக்க என்ன செய்திருக்க வேண்டும் என்று புலம்புகின்றனர். என்ன செய்திருக்க வேண்டுமாம்? அதாவது அல்லாஹ்வை பின் பற்றியிருக்க வேண்டுமாம், மேலும் நபிகள் நாயகத்தை பின் பற்றியிருக்க வேண்டுமாம். இவ்விரண்டையும் நாங்கள் பின்பற்றியிருந்தால் இங்கு வந்திருக்க மாட்டோமே என்று புலம்புகின்றார்கள்.

ஆக மறுமையில் நரகத்திற்கு செல்லாமல் வெற்றியடைய ஒரே வழி அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுவதுதான். மேலும் அவர்கள் நரகத்திற்கு வந்ததற்கான காரணத்தையும் இங்கு சொல்லி புலம்புகின்றார்கள். நாங்கள் எங்கள் தலைவர்களையும், பெரியார்களையும் பின் பற்றிவிட்டோம் என்று புலம்புகின்றார்கள்.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின் பற்றாமல் முன்னோர்களை பின்பற்றியதன் விளைவுதான் இவர்கள் நரகில் செல்ல (அதாவது மறுமையில் தோல்வி அடைய) காரணமாக இருக்கின்றது.

இன்றைக்கு நாம் பார்க்கின்றோம் அதிகமான முஸ்லிம்கள் திருக்குர்ஆணையும், நபி வழியையும் பார்க்காமல் முன்னோர்கள் செய்வதை பின்பற்றி நடக்கக்கூடியவர்களாக உள்ளனர். ஒருவரிடம் உள்ள தவறான செயலை இது நபி வழியல்ல என்று நாம் சுட்டிக்காட்டினால் கூட , எங்கள் முன்னோர்கள் செய்தது தவறா? என்று தான் கேட்கக்கூடியவர்களாக உள்ளனர்.

உதாரணமாக மவ்லிது ஓதுவதும், கத்தம் பாத்திஹா, திருமணத்தின் போது பல பித்அத்களை உருவாக்கி கொண்டதும், மார்கத்தின் பெயரால் புதிய புதிய காரியங்களை உருவாக்கிக் கொண்டது போன்ற செயல்கள் நபி வழிக்கும் இறைவனின் வார்த்தைக்கும் எதிரானதாகும். இதை பின் பற்றினால் நமது மறுமை நிலை என்னவாகும் என்பதை மேற்க்கூரிய வசனம் நமக்கு தெளிவு படுத்துகின்றது.

இவ்வுலகத்தில் நாம் செல்கின்ற பாதை மறுமையின் வெற்றியை நோக்கி உள்ளதா அல்லது தோல்வியை நோக்கி உள்ளதா? என்பதை நமக்கு நாமே பரிசோதித்து பார்க்க கடைமைபட்டிருக்கின்றோம்.

நாம் தொழுகின்ற தொழுகை நபிவழியின் அடிப்படையில் உள்ளதா? அல்லது முன்னோர்கள் நமக்கு காட்டி தந்த அடிப்படையில் உள்ளதா? என்பதை ஆராய வேண்டும். அதே போன்று நாம் செய்கின்ற திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தந்த அடிப்படையில் அமைந்துள்ளதா? அல்லது நமது முன்னோர்களின் வழிமுறை படி அமைந்துள்ளதா? என்பதை ஆராய வேண்டும். இது போன்று இன்னும்  இஸ்லாம் என்று நாம் செய்கின்ற அனைத்து செயல்களையுமே அல்லாஹ்வும், அவனது தூதரும் அனுமதித்த செயலைத்தான் செய்கின்றோமா அல்லது முன்னோர்களின் வழியா என்பதை சிந்திக்க வேண்டும்.

அப்படி நாம் செய்கின்ற செயல்கள் அல்லாஹ்வும், அவனது தூதரும் அனுமதித்த செயலாக இருந்தால் மறுமையில் நாம் வெற்றி பெற்று விடலாம். மாறாக நாம் செய்கின்ற செயல்கள் முன்னோர்களின் செயலாக இருந்தால் நம்மை நாமே நரகத்திற்கு முன் பதிவு செய்து கொள்கின்றோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அனைவரும் மறுமையில் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக!
-சலாஹுதீன்

குறை அல்லது நிறை எதாவது சொல்லிடு போங்க பாஸ்

No comments:

Post a Comment