Sunday, June 24, 2012

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழலாமா?


இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழலாமா?
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணை வைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இ
ணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நிலைமை.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சில கிராமவாசிகள் நம்ப வேண்டியவைகளை நம்பாமல் முஸ்லிம்கள் பட்டியலில் இருந்தாலும் அவர்கள் தொழுகைக்குத்தலைமை தாங்கும் பிரச்சனை எழவில்லை. எனவே நபிகள் நாயகம் காலத்தில் இந்தக் கேள்வியே எழவில்லை. 
ஆனால் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றாமல் பரம்பரை அடிப்படையில் முஸ்லிம்கள் உருவான பிறகு அடிப்படைக் கொள்கை தெரியாத ஒரு சமுதாயம்பிற்காலத்தில் முஸ்லிம்களுக்குள் கலந்தது. அவர்களிடம் இணை வைப்பும் நுழைந்தது.
எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்றோ பின்பற்றக் கூடாது என்றோ நேரடியாக ஆதாரம் இருக்க முடியாது.
நபிகள் நாயகம் காலத்தில் இல்லாத விஷயங்கள் பிற்காலத்தில் தோன்றினால் அதற்கு நேரடி ஆதாரம் இருக்காதே தவிர எவ்வாறு முடிவு செய்வது என்றஅடிப்படை நிச்சயமாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நிலை ஏற்படும் என்று இறைவனுக்குத்தெரியும். எனவே பிற்காலத்தவர்கள் அந்தப் பிரச்சனையைச் சந்திக்கும் போது எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு அடிப்படை உள்ளதா என்ற வகையில் தான் இதை அணுக வேண்டும்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய வேண்டும்.
ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون(17)9
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு,தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன்9:17 
இணை வைக்கும் இமாமைப் பின்பற்றுவது குறித்து நாம்என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனம்வழிகாட்டுகிறது.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளிவாசலை நிர்வகிக்கக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.
அன்றைய காலத்தில் பள்ளிவாசல்கள் என்பது கீற்றுக்கூறைகள் தான். அதில் நிர்வாகம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வணக்க வழிபாடுகளுக்குத் தலைமை ஏற்பது மட்டுமே அன்று இருந்த ஒரே நிர்வாகம். இணை கற்பிப்போர் பள்ளியை நிர்வகிக்கக் கூடாது என்றால் அதன் தலைமைப் பொறுப்பு அவர்களிடம்இருக்கக் கூடாது என்பது தான் கருத்தாக இருக்க முடியும். தொழுகையைத் தலைமை தாங்கும்பொறுப்பைத் தான் இது முதன்மையாக எடுத்துக் கொள்ளும்.
எனவே அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் இமாமாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகத் தெரிகின்றது.அவர்களின் அமல்கள் அழிந்து விட்டனஎன்று அதைத் தொடர்ந்து கூறப்படுவதில் இருந்து அமல்களில் தலைமை தாங்குவதைத் தான் இது குறிக்கிறது என்பது உறுதியாகும். 
இன்னும் சொல்லப் போனால் வெள்ளை அடித்தல்,கட்டுமானப் பணி மேற்கொள்ளுதல்மின் இணைப்பு பணி செய்தல்பராமரித்தல் போன்றவை இரண்டாம் பட்சமானது தான். அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் அதை விட்டுவிடலாம்ஆனால் வணக்க வழிபாடுகளை பள்ளிவாசல்களில் நிறுத்த் முடியாது. எனவே தொழுகை நடத்துவது தான் முதன்மையான முக்கியமான நிர்வாகப் பணியாகும். 
இன்றைய காலத்தில் தான் ஜமாஅத் தொழுகையின் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இமாம் எப்போது வருகிறாரோ அப்போது தான் ஜமாஅத் நடக்கும்.தொழுகையின் நேரம் முடிந்து விடும் என்ற நிலையில் மட்டுமே மற்றவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்குவார்கள். அதாவது தொழுகையை நடத்தும் இமாமிடம் தான் அதிகாரம் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகும்.
எனவே தொழுகைக்குத் தலைமை தாங்கும் உரிமை,தகுதி இணை வைப்பவருக்குக் கிடையாது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை. அவர்கள் தலைமை தாங்கக் கூடாது என்றால் அந்தத் தலைமையை நாம் ஏற்கக் கூடாது என்பதைப் புரிந்துகொள்வது எளிதானதே.
لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاة ويحذركم الله نفسه وإلى الله المصير(28)3
நம்பிக்கை கொண்டோர்,நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர் களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.
திருக்குர்ஆன்3:28
மூமின்களைத்தான் (அதாவதுஇணைகற்பிக்காதவர்களைத் தான்தலைவர்களாகஏற்றுக் கொள்ள வேண்டும்அவ்வாறு ஏற்றுக்கொள்ளாமல் தவிர்க்க முடியாத என்ற அச்சுறுத்தல்இருந்தால் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளலாம் என்று இவ்வசனம் கூறுகிறதுஅது ஆட்சித்தலைமைக்கு உரியது என்றாலும் அதை விட மேலானவணக்க வழிபாடுகளுக்கு இன்னும் சிறப்பாகப்பொருந்தும்.
தொழுகையில் நமக்காகவும் அனைவருக்காகவும் பாவமன்னிப்புக் கோரும் துஆக்கள் உள்ளன. அந்த துஆவில் இமாமும் அடங்குவார். ஆனால் பின்வரும் வசனம் இதைத் தடை செய்யும் வகையில் உள்ளது.
ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم(113)9
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர்அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும்இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
திருக்குர்ஆன் 9:113
இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்றுப் பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளை - நபிகள் நாயகத்துக்கும் இப்ராஹீம் நபிக்கும் கூட தளர்த்தப்படாத இந்தக் கட்டளை- மீறப்படும் நிலை ஏற்படும்.
எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்ற அறவே அனுமதி இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.

குறை அல்லது நிறை எதாவது சொல்லிடு போங்க பாஸ்

No comments:

Post a Comment